தந்தை வாங்கிய கடனை கேட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
தனியார் நிதி நிறுவனத்தில் தந்தை வாங்கிய கடனை கேட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
கோவை
தனியார் நிதி நிறுவனத்தில் தந்தை வாங்கிய கடனை கேட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
கல்லூரி மாணவி
கோவையை அடுத்த ஆலந்துறை முத்துசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 43). கிணறு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ராதாமணி. இவர்களது மகள் ராம் பிரபா(வயது 20). கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ராம் பிரபா கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை தங்கராஜ் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு எனது தந்தை மற்றும் பாட்டி குஞ்சம்மாள் ஆகியோர் ஒரு ஆண்டுக்கும் மேலாக வட்டி செலுத்தி வந்தனர். பின்னர் திடீரென பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சரியாக வட்டி கட்ட முடியவில்லை.
பாட்டி, தந்தை சாவு
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி நிறுவன அதிகாரி எங்களது வீட்டிற்கு வந்து பாட்டியிடம் உடனே கடனை செலுத்துமாறு வற்புறுத்தினார். இதனால் மன வேதனை அடைந்த அவர், தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு தந்தையையும் கடனை திரும்ப செலுத்தக்கோரி வற்புறுத்தி வந்த நிலையில், அவர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஏற்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார்.
மிரட்டல்
இதையடுத்து நான் கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டே பகுதி நேர வேலைக்கு சென்று கடனை சிறுக, சிறுக திரும்ப செலுத்தி வந்தேன். ஆனால் விரைவாக கடனை அடைக்க முடியாததால், சிறிது அவகாசம் கேட்டேன். அதற்கு என்னையும், எனது தாய் மற்றும் பள்ளியில் படிக்கும் எனது 3 சகோதரிகளையும் தொந்தரவு செய்வதுடன் மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் மன வேதனை அடைந்து 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். எனது குடும்ப நிலையை நினைத்து தற்கொலை முடிவை கைவிட்டேன். எனவே என்னையும், எனது குடும்பத்தையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story