மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே டீசல் மூலம் மலைரெயிலை இயக்கி சோதனை


மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே டீசல் மூலம் மலைரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 14 March 2022 10:20 PM IST (Updated: 14 March 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே டீசல் மூலம் மலைரெயிலை இயக்கி சோதனை நடந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குன்னூர்

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே டீசல் மூலம் மலைரெயிலை இயக்கி சோதனை நடந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

டீசல் மூலம் நீராவி என்ஜின்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நீராவி என்ஜின் பர்னஸ் ஆயில் மூலமும், அங்கிருந்து ஊட்டிக்கு டீசல் என்ஜின் மூலமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இதற்கிைடயே பர்னஸ் ஆயில் மூலம் நீராவி என்ஜின் இயக்கப்படுவதால் அதில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. 

எனவே பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் மூலம் நீராவி என்ஜினை இயக்க முடிவு செய்யப்பட்டது. 

சோதனை ஓட்டம்

இதற்காக இந்த என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு அந்த என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடந்தது.

அதன்படி காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 2 பெட்டிகளுடன் மலை ரெயில் புறப்பட்டது. இதில் பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் நிரப்பப்பட்டு இயக்கப்பட்டது. 

இந்த ரெயில் பிற்பகல் 2.30 மணிக்கு குன்னூரை வந்தடைந்தது. இதையடுத்து சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அடுத்த மாதம்

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, நீராவி என்ஜினை இயக்க பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் மூலம் இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்து உள்ளது. டீசல் மூலம் இயக்குவதால் உந்து சக்தி அதிகமாக இருக்கிறது. 

அத்துடன் புகை குறைவாக காணப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. எனவே அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் 5 பெட்டிகளுடன் சேர்த்து இந்த ரெயில் இயக்கப்படும் என்றனர். 


Next Story