பிளஸ்-2 மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர் அருண் தம்புராஜ், குறிப்பு எடுத்து படிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர் அருண் தம்புராஜ், குறிப்பு எடுத்து படிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
குடல்புழு நீக்க வார முகாம்
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். இதில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
நிகழ்ச்சி முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கிய கலெக்டர் அருண் தம்புராஜ், திடீரென பிளஸ்-2 வகுப்பறைக்குள் சென்றார். கலெக்டரை பார்த்ததும் அங்கிருந்த ஆசிரியரும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது என்ன பாடம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? எப்படி படிக்கிறீர்கள்? என்று மாணவிகளை பார்த்து கலெக்டர் கேட்டார். இதையடுத்து ஒரு மாணவியிடம் இருந்து வேதியியல் புத்தகத்தை வாங்கி அதை புரட்டி பார்த்த கலெக்டர், அதில் இருந்து சில கேள்விகளை மாணவிகளிடம் கேட்டார். அதற்கு ஒரு சிலர் பதிலளித்தனர். சிலர் பதில் சொல்ல தயங்கினர். தொடர்ந்து அவர் புத்தகத்தை வைத்து மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.
பின்னர் கலெக்டர், மாணவிகளிடையே பேசியதாவது:-
படிப்பில் கவனம்
பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். கடினமாக உழைத்தால் தான் என்னைப்போல அதிகாரி ஆக முடியும். ஆர்வம் இல்லாமல் எந்த ஒரு செயலை செய்தாலும் அது முழுமை பெறாது. வகுப்பறையில் கேள்வி கேட்டால், தவறாக இருந்தாலும் பரவாயில்லை முதலில் எழுந்து பதில் சொல்ல வேண்டும்.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பு எடுத்து படிக்கும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும். ஒரு பாடத்தை படிக்கும் போது, அதில் உள்ள பேராவில் 2 வரியாவது ஞாபகம் வைத்துக்கொண்டால் தான் அந்த பாடம் புரியும்.
தேர்வு நடத்துவேன்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். நான் உங்களுக்கு ஒரு வாரம் நேரம் கொடுக்கிறேன். வரும் திங்கட்கிழமை அன்று நான் இங்கு வருவேன். நான் குறிப்பிட்டு சொன்ன பாடத்தில் இருந்து தேர்வு வைப்பேன். தரவாக தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறிவிட்டு வகுப்பறையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் உடன் இருந்தார். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு, கலெக்டர் பாடம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
------
Related Tags :
Next Story