2 குழந்தைகளை கொன்று விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மகள் பவதாரணியுடன் பாரதி.
x
மகள் பவதாரணியுடன் பாரதி.
தினத்தந்தி 15 March 2022 12:15 AM IST (Updated: 14 March 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், காதல் திருமணம் செய்த பெண் 2 குழந்தைகளை கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி:-

சீர்காழியில், காதல் திருமணம் செய்த பெண் 2 குழந்தைகளை கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

லாரி டிரைவர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேல நாங்கூர் கிராமம் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கார்த்திக்(வயது27). இவர், மராட்டிய மாநிலம் புனேயில் கண்டெய்னர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். 
சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் சாலையை சேர்ந்த சண்முகம் மகள் பாரதி(21). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். 

காதல் திருமணம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மினி பஸ்சில் கார்த்திக் டிரைவராக பணிபுரிந்தபோது அவருக்கும், பாரதிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 
இவர்களுக்கு 3 வயதில் கவுசிக் என்ற ஆண் குழந்தையும், 1 வயதில் பவதாரணி என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இவர்கள், கடந்த சில மாதங்களாக சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி. நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். 

தூக்கில் பிணங்கள்

கார்த்திக் சென்னை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு டிரைவர் வேலைக்கு சென்று விடுவதால் பாரதி குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார். கார்த்திக் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பதாகவும், இதனால் அவருக்கும், பாரதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பாரதி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 
இந்த நிலையில் நேற்று பாரதி தனது தாய் சித்ராவுக்கு போன் செய்து தானும், குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். இதனால் பதறிப்போன சித்ரா, பாரதியின் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு கண்ட காட்சியால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
பாரதி தூக்கில் பிணமாக தொங்கியதைப்பார்த்ததும் தனது பேரக்குழந்தைகளை தேடிப்பார்த்தார். அப்போது வீட்டுக்குள் பேரக்குழந்தைகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. 

கதறி அழுதார்

ஒரே நேரத்தில் தனது மகளும், பேரக்குழந்தைகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து சித்ரா நொறுங்கிப்போனார். துக்கம் தாங்காமல் அவர் சத்தம் போட்டு கதறி அழுதார். அவருடைய கதறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து ஓடிவந்து பார்த்தனர்.
அப்போதுதான் தூக்கில் பாரதியும், அவரது குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது அவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து பாரதி மற்றும் அவரது 2 குழந்தைகள் உள்பட 3 பேரின் உடல்களையும் உடனடியாக கீழே இறக்கினர்.

குழந்தைகளை கொன்று தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுனன், தில்லை நடராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தினர். 
போலீசாரின் விசாரணையில் பாரதி தனது மகன் கவுசிக், மகள் பவதாரணி ஆகிய இருவருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்ததும்,  இதனால் மயங்கிய நிலையில் இருந்த 2 குழந்தைகளையும் ஒரு அறையில் தனித்தனியாக புடவையால் தூக்கு மாட்டி விட்டு கொலை செய்ததும், பின்னர் பாரதியும் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.  

விசாரணை

இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இதுகுறித்து வெளியூரில் இருக்கும் பாரதியின் கணவருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். 

சோகம்

குடும்ப தகராறில் தான் பெற்ற 2 குழந்தைகளையும் கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Next Story