கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 March 2022 10:53 PM IST (Updated: 14 March 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி, 

உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 

நைனாகுப்பம் கிராமம் செங்குறிச்சி ஊராட்சியில் துணை கிராமமாக உள்ளதால் கிராமத்திற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் தனி ஊராட்சியாக்கக்கோரி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து வருகிறோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் அடையவும், எங்களின் வாழ்வாதாரம் மேம்படவும், எங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நைனாகுப்பம் ஊராட்சியை தனி ஊராட்சி உருவாக்க வேண்டும். 

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எதிர்வரும் தேர்தலை புறக்கணிப்பதுடன், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 


Next Story