பட்டாசு குடோனில் வெடி விபத்து; உடல்சிதறி தொழிலாளி பலி
கள்ளக்குறிச்சியில் பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஷேக்தாவூத். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள க.மாமனந்தல் சாலை அருகே வயல்வெளி பகுதியில் அரசின் அனுமதி பெற்று நாட்டுவெடி மற்றும் வாணவெடி தயாரிக்கும் குடோன் நடத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்தாவூத் இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய மகன்களான ஷபியுல்லா (வயது 45), இஸ்மாயில் (41) ஆகியோர் பட்டாசு குடோனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பட்டாசு குடோனின் உரிமம் கடந்த 2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து ஷபியுல்லா, இஸ்மாயில் ஆகியோர் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் வழங்குமாறு அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அந்த குடோனுக்கு சரியான பாதை வசதி, போதுமான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வதிகள் இல்லாததால் அரசு அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் உரிமம் பெறாமல் பட்டாசு குடோனை நடத்தி வந்ததாக தெரிகிறது.
தரைமட்டமாகிய குடோன்
நாட்டு வெடி மற்றும் வாண வெடி தயாரிக்கும் பணியில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த ஏழுமலை (58) உள்பட 3 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் ஏழுமலை வழக்கம்போல் குடோனை திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த குடோன் வெடித்து சிதறியது. இதில் ஏழுமலை உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த குடோன் தரைமட்டமாகியதுடன் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் இந்த வெடிவிபத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வெடி விபத்து ஏற்பட்ட இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடிகள் மேலும் வெடிக்காமல் இருக்க தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சிதறிக்கிடந்த ஏழுமலையின் உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
மேலும் உரிமம் இன்றி பட்டாசு குடோன் நடத்தி வந்த ஷபியுல்லா, இஸ்மாயில் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு குடோன் வெடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story