ஒடுகத்தூர் அருகே மினி லாரி கவிழ்ந்து பெண் பலி
ஒடுகத்தூர் அருகே மினி லாரி கவிழ்ந்து பெண் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
அணைக்கட்டு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா மதனாஞ்சேரி பகுதி முருகன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி வனிதா, செல்வராஜ் மனைவி செல்வி, சேட்டு மனைவி செல்வி, ஞானவேல் மனைவி அம்மு மற்றும் சுந்தராம்பாள், சாந்தி, ஜெயவேலு, சுமதி ஆகிய 8 பேர் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த தென்புதூர் கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்கு மோல்டிங் போடும் எந்திரங்களுடன் மினி லாரியில் வந்தனர். முருகன் குட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் திருப்பதி (வயது 29) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
ஆசனாம்பட்டு-ஆலங்காயம் சாலை முதல் வளைவில் திரும்பியபோது மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கோவிந்தராஜ் மனைவி வனிதா (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story