5.89 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 89 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:-
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 89 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
குடற்புழு நீக்க வாரம்
தேசிய குடற்புழு நீக்க வாரம் இந்த ஆண்டு நேற்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடங்கியது. முகாம் வருகிற 17, 18 மற்றும் 19-ந் தேதிகளிலும், விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதியும் நடைபெற உள்ளது. இம்முகாமினை நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 200 மி.கி மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய கருவுறாத மற்றும் தாய்பாலூட்டாத பெண்களுக்கு 400 மி.கி அண்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படுகிறது. இம்மாத்திரை சாப்பிடுவதால் குடற்புழு முற்றிலும் நீக்கப்படும். ரத்தசோகை நோய் மற்றும் ஊட்டசத்து குறைபாடு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மாத்திரை
நாமக்கல் மாவட்டத்தில் 1 வயது குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 89 ஆயிரத்து 401 குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1 லட்சத்து 53 ஆயிரத்து 830 பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து குழந்தைகள் புகார் எண் குறித்து மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கேட்டப்போது அனைத்து மாணவர்களும் ஒருமித்த குரலில் 1098 என்று தெரிவித்தனர். இந்த எண் குறித்து உங்களை போன்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தெரிவித்து, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
தொடர்ந்து குடற்புழு நீக்க கையேட்டினை கலெக்டர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். மேலும், மாணிக்கம்பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவிகள் சுத்தமாக கை கழுவும் முறை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அவசர ஊர்தி
பின்னர் கொல்லிமலை மக்களின் தேவைக்காக கூடுதலாக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பெறப்பட்ட அவசர சேவை ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, துணை இயக்குகர் (சுகாதாரம்) பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story