தர்மபுரி மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை கலெக்டர் திவ்யதர்சினி தகவல்


தர்மபுரி மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
x
தினத்தந்தி 14 March 2022 11:09 PM IST (Updated: 14 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
குடற்புழு நீக்க மாத்திரைகள்
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் வரவேற்றார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய  குடற்புழு நீக்க மாத்திரை குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காக  வழங்கப்படுகின்றன. இதனை குழந்தைகள் கட்டாயம் எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி வரை அரசு, தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் மாணவ-மாணவிகளுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. விடு்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு குடற்புழு நீக்க முகாம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
ஊக்குவிக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் அல்பெண்டசோல் மாத்திரைகள் 4.92 லட்சம் குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1.22 லட்சம் பெண்களுக்கும் என மொத்தம் 6.14 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்து குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை (அல்பெண்டசோல்) உட்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, தாசில்தார் வினோதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.வாசுதேவன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story