திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை


திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2022 11:09 PM IST (Updated: 14 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி கவுரி(26). இவர்களுக்கு 3½ வயதில் அருணா என்ற பெண் குழந்தையும் 1½ வயதில் பூமிநாதன் என்ற மகனும் உள்ளனர். ஏழுமலைக்கும் கவுரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று காலையில் ஏழுமலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து கவுரி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அதே ஊரில் உள்ள நிலத்துக்கு சென்றார். பின்னர் அவர் தனது குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களுக்கு விஷத்தை கொடுத்துள்ளார். தொடர்ந்து கவுரி, அருகில் உள்ள பலா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சிறிது நேரத்தில் அந்த 2 குழந்தைகளும் கதறி அழ தொடங்கின. இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வந்து பார்த்தனர். அப்போது 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி மயக்க நிலைக்கு சென்றனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீசார் விசாரணை

இதற்கிடையே இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கவுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story