ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மீனவர்கள்


ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மீனவர்கள்
x
தினத்தந்தி 15 March 2022 12:30 AM IST (Updated: 14 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் குடியிருப்பை சேர்ந்த பார்த்திபன், சிவதாஸ், சந்திரன், சுகுந்தன், பிரபாகரன் உள்பட 9 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இருதரப்பினர் பூம்புகார் போலீசில் புகார் செய்திருந்தனர். இதில் எதிர்தரப்பை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிரச்சினை நடந்து 18 நாட்களுக்கு பிறகு அவர் கொரோனா தொற்றால் இறந்தது தெரியவந்தது. ஆனால் எங்களை பழிவாங்கும் நோக்குடன் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டோம். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளோம். இந்த நிலையில் எங்களுடைய குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை சட்டவிரோதமாக ஊரை விட்டு ஒதுக்கியதை நீக்கி, நாங்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story