இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது


இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது
x
தினத்தந்தி 14 March 2022 11:10 PM IST (Updated: 14 March 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது என்று அண்ணாமலை கூறினார்.

மோகனூர்:-
இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது என்று அண்ணாமலை கூறினார்.
பேட்டி
நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் நடந்த நந்தகோபாலசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு கடந்த 10 மாதத்தில் அறிவிப்பு அரசு என்ற பெயரை மட்டும் எடுத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை, தனது அரசின் திட்டம் போல் தி.மு.க. அரசு காட்டி கொள்கிறது.
ரஷியா- உக்ரைன் போரின் போது 1,866 தமிழக மாணவர்கள், மத்திய அரசின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஏதோ தன்னுடைய முயற்சியால் மாணவர்களை மீட்டதாக கூறிக்கொள்கிறது. இது ஏற்புடையதல்ல.
துப்பாக்கி சூடு
இலங்கை தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நூலகம், 150-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சு வாகனங்களை வழங்கி உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரகம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் மீது பிரதமர் நரேந்திர மோடி அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். இந்தியாவும், இலங்கையும் போட்ட ஒப்பந்தத்தில் 13-வது அமெண்ட்மெண்ட் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை நிச்சயமாக இலங்கை அரசு செய்யும்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை. அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த அளவுக்கு இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் வேஷம் போட்டு வருகின்றனர்.
கச்சத்தீவு
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கச்சத்தீவை விட்டுக் கொடுத்தார். அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய வாஜ்பாய், மாபெரும் தவறை செய்து விட்டார் இந்திராகாந்தி என பதிவு செய்துள்ளார். அன்று கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு இன்று அதை பற்றி பேசுவது விசித்திரமாக உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related Tags :
Next Story