கோவில் உள்பிரகாரத்தில் நேர்த்திக்கடன் செலுத்த தடை


கோவில் உள்பிரகாரத்தில் நேர்த்திக்கடன் செலுத்த தடை
x

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழாவில் கோவில் உள்பிரகாரத்தில் நேர்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வலங்கைமான்; 
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழாவில் கோவில் உள்பிரகாரத்தில் நேர்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
மகா மாரியம்மன் கோவில்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பாடைக்காவடி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி பாடைக்காவடி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பாடைக்காவடி திருவிழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 2-ம் காப்பு கட்டிய தினத்திலிருந்து தினமும் காமதேனு, மயில் வாகனம் ரிஷபம், சிம்மம் மற்றும் வெள்ளிஅன்னவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடக்கிறது. ஏப்ரல் 3-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) புஷ்ப பல்லக்கு விழா நடக்கிறது. 
பாடைக்காவடி திருவிழா
பாடைக்காவடி திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பாடைக்காவடி, அலகுகாவடி, பன்னீர்காவடி, தொட்டில் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குறிப்பாக குழந்தை வரம் கேட்டு வேண்டியவர்கள் கரும்பு தொட்டிலில் தங்கள் குழந்தைகளை படுக்க வைத்து கோவிலை வலம் வருவார்கள். இந்த பாடைக்காவடி திருவிழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசின் உத்தரவுக்கு இணங்க நடைபெறவில்லை. மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய தெப்பத் திருவிழாவும் நடைபெறவில்லை.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆண்டு பாடைக்காவடி திருவிழா நடைபெறுவதையொட்டி  வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 
கூட்டத்துக்கு  மின்சார வாரியம் சார்பில் திருவிழாக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதிகள், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசிகள், மற்றும் தேவையான மருந்துகளுடன் கூடிய மருத்துவக்குழு 24 மணி நேரமும் பணியில் இருக்க உறுதி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
னுதி இல்லை 
மேலும் விழாவின்போது கோவிலில் உள்பிரகார பகுதிகளில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நேர்த்திக்கடன் செலுத்தும் காவடிகள் அனைத்தும் கோவிலை சுற்றி வரும் சாலைகளை பயன்படுத்த வேண்டும். கோவில், அர்த்தமண்டபம் பகுதி மற்றும்  பக்தர்கள் கூட்டமாக திரளும் பகுதிகளில் பெண் போலீசாரை அதிக அளவில் நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, கோவிலில் தினசரி நடைபெறும் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  முடிவுகள் எடுக்கப்பட்டது.  
கூட்டத்தில் மகாமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன், ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் கோபு, மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அகஸ்தியா, சரக வருவாய் ஆய்வாளர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story