விவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி
பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி விவசாயிடம் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
மேல்மலையனூர் தாலுகா கண்ணலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் மோகன் (வயது 33). விவசாயி. கடந்த 10.12.2021 அன்று கபிரியேல் ஐசக் என்ற பெயருடைய நபர் மோகனிடம் முகநூல் மூலம் நண்பராக பழகினார். அப்போது அந்த நபர், மோகனை வாட்ஸ்-அப் மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கு அவ்வப்போது பரிசுப்பொருட்களை பார்சலாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் 11.12.2021 அன்று மோகனை தொடர்பு கொண்ட அந்த நபர், டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலைய சுங்க அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு பார்சல் வந்திருப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ள டெலிவரி கட்டணம், சுங்க கட்டணம் ஆகியவற்றுக்காக ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்தை அனுப்புமாறு கூறினார். இதனை நம்பிய மோகன், 13.12.2021 முதல் 10.1.2022 வரை அந்த நபர் கூறிய தனியார் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், மோகனுக்கு பரிசுப்பொருள் எதையும் அனுப்பாமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து மோகன், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story