வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


கரூர்
x
கரூர்

கிருஷ்ணராயபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம், 
காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா பிள்ளா பாளையம் ஊராட்சி, கொம்பாடிபட்டி மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 2001-ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாக்கள் 2017-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும் இடத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது. 
இதனையடுத்து இடத்தினை அளந்து காட்ட வேண்டும் என மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மீண்டும் உரியவர்களிடம் இடத்தை ஒப்படைக்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து செல்வன், ஒன்றிய பொருளாளர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பேச்சுவார்த்தை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் யசோதா, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர்) பழனி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 2007-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட 42 பயனாளிகளுக்கு குளித்தலை ஆர்.டி.ஓ. அனுமதி பெற்று முன்னுரிமை அடிப்படையில் பட்டா மற்றும் இடத்தினை அளந்து காட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
மற்றவர்களுக்கு இடம் இல்லாத பட்சத்தில் வேறு இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story