வெடிமருந்து வெடித்ததில் மாணவி உடல் சிதறி பலி


வெடிமருந்து வெடித்ததில் மாணவி உடல் சிதறி பலி
x
தினத்தந்தி 15 March 2022 12:26 AM IST (Updated: 15 March 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே வெடி மருந்து வெடித்ததில் மாணவி உடல் சிதறி பலியானார். தாயாரும் படுகாயம் அடைந்தார்.

ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் அருகே வெடி மருந்து வெடித்ததில் மாணவி உடல் சிதறி பலியானார். தாயாரும் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தொழிலாளி
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆறுதெங்கன்விளையை சேர்ந்தவர் ராஜன் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு தேன்மொழி (13), வர்ஷா (10) என்ற 2 மகள்கள் இருந்தனர்.
அவர்கள் ஆலங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  தேன்மொழி 8-ம் வகுப்பும், வர்ஷா 5-ம் வகுப்பும் படித்தனர். இவர்கள் வீட்டில் முயல் வளர்த்து வருகிறார்கள். அந்த முயலை வர்ஷா பராமரித்து வந்தாள். அதே போல் நேற்று இரவு 7.45 மணி அளவில் முயலுக்கு உணவு கொடுக்க வர்ஷா சென்றாள்.
அறை தரைமட்டமானது
அப்போது அவள் வீட்டின் முன் பகுதியில் உள்ள அறைக்குள் சென்றாள். அந்த அறையில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் வெடிமருந்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
வர்ஷா உள்ளே சென்ற சிறிது நேரத்தில் “டமார்” என்ற பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து வெடித்து சிதறியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறை இடிந்து தரை மட்டமானது. இதனால் அந்த பகுதியே அதிர்ந்தது.  சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு ஓடி வந்தனர். 
மாணவி சாவு
அப்போது வீட்டில் இருந்த ராஜன், பார்வதி, தேன்மொழி ஆகியோர் தரை மட்டமான அறைக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு வர்ஷா உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடந்தாள். அதை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தில் வெடிமருந்து வெடித்து சிதறியதில் ஒரு கல் வந்து விழுந்ததில் பார்வதி படுகாயம் அடைந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது ராஜன் வீட்டுக்குள் வெடிமருந்து எப்படி வந்தது. அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க வெடிமருந்து பதுக்கி வைத்து இருந்தனரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது. அதைத்தொடர்ந்து ராஜனையும், அவருக்கு வெடி மருந்து சப்ளை செய்ததாக ஒரு பெண்ணையும் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடிமருந்து வெடித்து சிதறியதில் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story