ஒருவர் கூட விடுபடாமல் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ள வேண்டும்


ஒருவர் கூட விடுபடாமல் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 15 March 2022 12:43 AM IST (Updated: 15 March 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க வாரம் மார்ச் 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் நடைபெற அரசு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இம்முகாம் தொடங்கி வைக்கப்படுகிறது. இம்முகாம் ஒருவார காலம் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும். தொடர்ந்து, விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 21-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

பாதிப்புகள்

நாடு முழுவதும் கடந்த காலங்களில் 6 மாத குழந்தை முதல் 19 வயதிற்குட்பட்ட வா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 19 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) அல்பெண்டசோல் மாத்திரை தேசிய குடற்புழு நீக்க தினத்தில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 1,821 அங்கன்வாடி மையங்கள், 366 துணை சுகாதார மையங்களிலும் 6 மாத குழந்தை முதல் 19 வயதுக்குட்பட்ட 6,80,829 குழந்தைகள் மற்றும் 1,62,341 (19 - 30 வயதிற்குட்பட்ட பெண்கள்) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகின்றன. பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
குடற்புழுத்தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம். குடற்புழு பாதிப்பை தடுக்க திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்றவற்றின் மூலம் குடற்புழு பாதிப்பை முழுமையாக தடுக்கலாம்.

அனைவரும் உட்கொள்ள வேண்டும்

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் ஒருவர்கூட விடுபடாத அளவிற்கு குடற்புழு மாத்திரைைய முறையாக உட்கொண்டு தங்கள் உடல் நலனை பாதுகாத்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்புகள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் மோகன் பார்வையிட்டு பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளும் கண்காட்சி அரங்கை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத்தலைவர் சித்திக்அலி, நகர்நல மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணியன், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சசிகலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story