நகைக்கடை அதிபரை ரூ.2½ கோடியுடன் காரில் கடத்தியவர்கள் கைது
நகைக்கடை அதிபரை ரூ.2½ கோடியுடன் காரில் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே நகைக்கடை அதிபரை தாக்கி காருடன் ரூ.2½ கோடியை கடத்திய டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரில் கடத்தல்
மதுரை வடக்குமாசி வீதி பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ் (வயது 62). இவர் அரசரடி பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். தர்மராஜ் தனது கடை ஊழியர் கோவிந்தராஜனுடன் நகை வாங்குவதற்காக ரூ.2½ கோடியுடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை டிரைவர் பிரவீன்குமார் ஓட்டினார். திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழி சாலையில் உள்ள நேசன்ஏரி விளக்கு அருகே கார் வந்தபோது கோவிந்தராஜன் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறினார். உடனே டிரைவர் பிரவீன்குமார் காரை நிறுத்தினார். பின்னர் கோவிந்தராஜன் மற்றும் டிரைவரும் காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் சென்றனர். காரில் தர்மராஜ் மட்டும் அமர்ந்து இருந்தார்.
அப்போது திடீரென 2 மர்ம நபர்கள் காருக்குள் புகுந்து தர்மராஜின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாக்கி காருடன் அவரை கடத்தினர். பின்னர் அவரை பேரையூர் அடுத்த அத்திபட்டி சாலையில் உள்ள ஜம்பலபுரம் கிராமத்தின் அருகே நடுவழியில் இறக்கிவிட்டு ரூ.2½ கோடி மற்றும் காருடன் தப்பி சென்றனர்.
டிரைவர் கைது
இது தொடர்பாக தர்மராஜ் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பினர். மேலும் கடை ஊழியர் கோவிந்தராஜ் மற்றும் டிரைவர் பிரவீன் குமாரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த டி.ஐ.ஜி. பொன்னி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவகுமார் ஆகிேயாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது டிரைவர் பிரவீன்குமார் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பிரவீன்குமார் தனது நண்பர்களுடன் திட்டம் போட்டு பணத்துடன் காரை கடத்தியது தெரியவந்தது. பின்னர் பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பணம், கார் மீட்பு
மேலும், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் ராமகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பணத்துடன் காரை கடத்தியவர்கள் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் இருவரையும் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருநகர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி(26), மொட்டமலை அருண் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2½ கோடி மற்றும் காரையும் மீட்டனர்.
Related Tags :
Next Story