விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம்


விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம்
x
தினத்தந்தி 15 March 2022 12:58 AM IST (Updated: 15 March 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது

விராலிமலை
விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் வள்ளி-தெய்வானையுடன் முருகன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில், அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கி திருப்புகழ் பாட வைத்த தலமாகவும், நாரதருக்கு பாவ விமோசனம் அளித்த தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால், தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலின் கும்பாபிஷேகமானது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டு ஆனதையொட்டி நேற்று கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜை தொடங்கி மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மதியம், மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை நாதஸ்வரம், தவில் மற்றும் மங்கள இசையுடன் சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானை திருவீதி உலா நடைபெற்றது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


Next Story