கிள்ளனூரில் ஜல்லிக்கட்டு


கிள்ளனூரில் ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 15 March 2022 1:22 AM IST (Updated: 15 March 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி கிள்ளனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர

கீரனூர்
குன்றாண்டார்கோவில் அருகே உள்ள கிள்ளனூர் அய்யனார் கோவில் மாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. அந்த காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து 900 காளைகளுக்கு அனுமதி அளித்தனர். இதேபோல, மாடுபிடி வீரர்களுக்கும், மருத்துவர்கள் பரிசோதனை செய்து 300 பேருக்கு அனுமதி அளித்தனர். 
 அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேலு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். பின்னர், வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் பிடிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
61 பேர் காயம்
 வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த பல காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளி குதித்து ஓடின. இதனையடுத்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, மிக்சி, வெள்ளி நாணயம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
 இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளையின் உரிமையாளர்கள் உள்பட 61 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்களில் படுகாயமடைந்த செல்வி(வயது 27), அடைக்கலம் (27), சின்னத்துரை(49), விக்னேஷ் (26), விஜய்(22), சபரிராஜ்(23) உள்பட 10 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மதியம் நிறுத்தம்
ஜல்லிக்கட்டை குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.  இந்தநிலையில் உரிமையாளர்கள் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டதால் கூட்டத்துக்குள் காளைகள் புகுந்தன. இதனால், கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் கீரனூர் மற்றும் உடையாளிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Next Story