புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 1:24 AM IST (Updated: 15 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை, 
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ரெயில்வே பணியாளர்கள் தரப்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் மதுரை ரெயில் நிலையத்தின் மேற்குநுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ரபீக் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதிய பென்சன் திட்டம், பா.ஜ.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ள கேரளத்திலும் புதிய பென்சன் திட்டம் அமலில் உள்ளது. நாட்டிலேயே மேற்குவங்காள மாநிலத்தில் மட்டுமே புதிய பென்சன் திட்டம் இல்லை. பிற மாநிலங்கள் பழைய பென்சன் திட்டம் கொண்டு வரப்படும் என ஏமாற்றுகின்றனர். எனவே, மத்திய அரசு உடனடியாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சமூக பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்துக்கு வழிவகுக்க வேண்டும்.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதில் தீவிரம் காட்டுகிறது. ரெயில்வேக்கு சொந்தமான உற்பத்தி தொழிற்சாலைகளை மூடிவிட்டு, தனியாரிடம் இருந்து அதே பொருள்களை கூடுதல் விலைக்கு வாங்குகிறது. ரெயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்டத்தை சேர்ந்த ரெயில்வே பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story