பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்
நிலத்தை அபகரித்த சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நொனையவாடியை சேர்ந்த சரஸ்வதி (வயது 40) என்பவர் தனது கணவர் வேலுவுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்து தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று சரஸ்வதியை தடுத்து நிறுத்தி அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரஸ்வதி கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஓதியத்தூரில் எனது தந்தை எனது பெயரில் 10 சென்ட் நிலத்தை எழுதி வைத்திருந்தார். என்னுடைய அண்ணன் சுப்பிரமணி அந்த நிலத்தின் ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடன் வாங்கி தருவதாக கூறி அவரது பெயருக்கு நிலத்தை கிரையம் செய்து கொண்டார். இதையறிந்ததும் தனது நிலத்தை மோசடி செய்து அபகரித்ததாக கூறி கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் எனது அண்ணன் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும், கலெக்டர் அலுவலகம் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்றும் கூறி அவர்கள் இருவரையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே தற்கொலைக்கு முயன்றதாக சரஸ்வதி மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story