கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
பேரனை மீட்டுத்தர வேண்டும்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, பொன்னகர் திருமால் நகரை சேர்ந்த நடராஜன், அவருடைய மனைவி சரஸ்வதி ஆகியோர், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா அவர்களிடம் பேசி, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அழைத்து சென்று மனு வழங்க செய்தார்.
இதைத்தொடர்ந்து சரஸ்வதி கூறும்போது, ‘கடந்த 2018-ம் ஆண்டு அய்யம்புதூரில் நடந்த விபத்தில் எங்கள் மகன், மருமகள் இறந்தனர். அவர்களது மகன் கதிஷனுக்கு (வயது 7) சாலை விபத்தில் 2 கால்கள் மற்றும் முதுகெலும்பு பாதித்ததால் கேரளாவில் சிகிச்சை வழங்கினோம். தற்போது நாங்கள் சத்தியமங்கலம் பகுதியில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எனது மகன், மருமகள் விபத்தில் இறந்ததால், இழப்பீடு தொகை விரைவில் கிடைக்கும் என்பதால், எங்கள் மருமகளின் தாயார் மற்றும் உறவினர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு பேரனை தூக்கி சென்றுவிட்டனர். எனவே அவனை மீட்டுத்தர வேண்டும்’ என்றனர்.
மரங்களை வெட்டக்கூடாது
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி, ரூ.933 கோடியே 10 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயல்வதை அனுமதிக்கக்கூடாது. சீரமைப்பு மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும். தற்போது புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாசனதாரர் அல்லாத பலருக்கும், தொழிற்சாலைகள், சட்ட விரோத செயல்பாட்டுக்கும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் திருடிச்செல்வதை தடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தனர்.
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதும், மரங்களை வெட்டுவதும் சட்டத்துக்கு புறம்பானது. இந்த வாய்க்கால் மண்ணால் ஆனது என்பதால், நிலத்தடி செரிவூட்டும் திட்டமாகும். கான்கிரீட் தளம், சுவர் அமைப்பதால் மறைமுக பாசனங்கள் பாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சாதிச்சான்றிதழ்
சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
இந்து பழங்குடியின பிரிவு காட்டு நாயக்கர் வகுப்பை சேர்ந்த 168 குடும்பத்தினர் மேற்கண்ட பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வில்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எங்களுடைய குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
காய்கறி மாலை
பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அணை நாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கயம் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘கீழ்பவானி வாய்க்காலையொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை நாங்கள் தொடர்ந்து அங்கு வசிக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் நேற்று காய்கறிகளை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, இப்படியெல்லாம் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லக்கூடாது என்றனர். அதைத்தொடர்ந்து அவர்கள் காய்கறி மாலையை கழற்றி வைத்து விட்டு, உள்ளே சென்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
சுங்க கட்டணம்
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கூடுதல் சுங்க கட்டணம் வசூலித்ததால் பணம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டதன் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். இதன் காரணமாக மாநகராட்சி சுங்க கட்டணத்தில் இருந்த தொகையை சிறிது காலம் குத்தகைதாரர் வசூல் செய்தனர். மீண்டும் பழையபடி சுங்க கட்டண ரசீது கொடுக்காமல் அதிக பணம் வசூல் செய்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி சார்பில் நேரடியாக சுங்க கட்டணம் வசூல் செய்தால் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையத்தை சேர்ந்த கொமரசாமி (80) -அம்மாசியம்மாள் தம்பதியினர் கொடுத்திருந்த மனுவில் ‘தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், தங்களிடம் இருந்து மகன் கருப்புசாமி அபகரித்து கொண்ட நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
சமதர்ம மக்கள் கட்சி தலைவர் செங்குட்டுவன் கொடுத்திருந்த மனுவில், ‘அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி ஆற்றுப்பகுதியில் படித்துறையை சுற்றியுள்ள கரைகளில் செடி, கொடிகள் வளர்த்து பாதையை அடைத்துக்கொண்டு காடுபோல் புதர்மண்டி கிடக்கிறது. இதை சுத்தப்படுத்தி அங்கு ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக 2 நவீன கழிப்பிட வசதியுடன் சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும். மேலும் திருவள்ளுவர் நகரில் கான்கிரீட் போடப்படாத இடங்களில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
216 மனுக்கள்
இதேபோல் ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை சம்பந்தப்பட்ட அலுவலகர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story