ரூ.60 லட்சத்தில் புதிய உழவர் சந்தை- கலெக்டர் விஷ்ணு அடிக்கல் நாட்டினார்


ரூ.60 லட்சத்தில் புதிய உழவர் சந்தை- கலெக்டர் விஷ்ணு அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 15 March 2022 1:44 AM IST (Updated: 15 March 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள உழவர் சந்தைக்கு கலெக்டர் விஷ்ணு அடிக்கல் நாட்டினார்.

நெல்லை:
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள உழவர் சந்தைக்கு கலெக்டர் விஷ்ணு அடிக்கல் நாட்டினார்.

உழவர் சந்தை
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.ஏ. காலனி விரிவாக்க பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக உழவர்சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. 
நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய உழவர் சந்தைக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அங்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்தப் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 1999-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது உழவர் சந்தை தொடங்கப்பட்டது. 
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மகாராஜா நகர், நெல்லை கண்டியபேரி, மேலப்பாளையம், அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது 5-வதாக இங்கு உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட உள்ளது. இங்கு 16 கடைகளும், ஒரு குளிர்பதன கிடங்கு மற்றும் பொதுமக்கள் எளிதாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளை அறியும் வகையில் டிஜிட்டல் போர்டு, உழவர் சந்தை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

ரூ.60 லட்சம்
இந்த திட்டம் ரூ.60 லட்சம் நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் பாளையங்கோட்டை தாலுகாவிலுள்ள ரெட்டியார்பட்டி, பருத்திபாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வாய்ப்பாக அமையும். 
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், துணை இயக்குனர் முருகானந்தம், மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் எழில், மாநகராட்சி கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், சகாய ஜூலியட் மேரி, அம்பிகா, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story