என்னை தோற்கடிக்க பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சதி; சித்தராமையா குற்றச்சாட்டு


என்னை தோற்கடிக்க பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சதி;  சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 March 2022 1:46 AM IST (Updated: 15 March 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு (2023) நடக்கும் சட்டசபை தேர்தலில் என்னை தோற்கடிக்க பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சதி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

கோலார் தங்கவயல்:

சித்தராமையா பேட்டி

  முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் கோலாருக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடக்கும் சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என இன்னும் முடிவு செய்யவில்லை. பாதாமி தொகுதியில் பெங்களூருவில் இருந்து தூரத்தில் உள்ளது. இதனால் பெங்களூருவுக்கு அருகில் இருக்கும் தொகுதியில் போட்டியிட ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

  சாமுண்டீஸ்வரி தொகுதியில் மக்கள் என்னை புறக்கணித்து விட்டனர். இதனால் அங்கு போட்டியிட மாட்டேன். உன்சூர், கொப்பால், ஹெப்பால், சாம்ராஜ்பேட்டை, கோலார் தொகுதியில் போட்டியிடுமாறு ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள். எனக்கு எந்த தொகுதி பொருத்தமோ அங்கு போட்டியிடுவேன்.

பா.ஜனதா ‘பி’ டீம்

  என்னை தோற்கடிக்க காங்கிரசில் யாரும் முயற்சிக்கவில்லை. என் மீது பயம் உள்ளதால், என்னை தோற்கடிக்க ஜனதாதளம்(எஸ்), பா.ஜனாவினா் சதி செய்து வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்), மதசார்பற்ற கட்சி கிடையாது. அது பா.ஜனதாவின் ‘பி’ டீம். இவ்வாறு அழைத்ததில் எந்த தவறும் இல்லை.

  இதற்கு முன்பு ஜனதாதளம்(எஸ்) கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவில்லயைா?. அவர்கள் (ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா) உள்ஒப்பந்தம் ெசய்துகொண்டாலும், நேரடியாக கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

பெரும்பான்மை கிடைக்காது

  கர்நாடகத்தில் பா.ஜனதா எப்போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்ததில்லை. 2008, 2018 ஆகிய ஆண்டுகளில் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை இழுத்து ஆட்சியை பிடித்தனர். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காது.

  காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்சினைகளுக்கு போராடி வருகிறது. இதனால், மக்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பி வருகின்றனர்.

  மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தியதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து மகதாயி, பின்தங்கியுள்ள கல்யாண கர்நாடக பகுதிக்கு கிருஷ்ணா மேலணை திட்டம் அமல்படுத்துவது மற்றும் கடலோர பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story