புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழக அரசு, 2021-22 வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி சிறந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது. அந்தவகையில் புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய கருவிகள் கண்டுபிடித்த விவசாயி ஒருவருக்கு மாநில அளவில் தலா ரூ.1 லட்சம் தமிழக வேளாண் துறையால் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை வேளாண் துறையை அணுகி பெற்றுக் கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 18-ந் தேதி மாலை 3 மணிக்குள் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், சிறந்த அங்கக விவசாயிகளுக்கு மாநில அளவில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. அதன்படி, சிறந்த அங்கக விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.60 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம், தமிழக தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை தோட்டக்கலைத்துறையில் பெற்று, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 18-ந் தேதி மாலை 3 மணிக்குள் புதுக்கோட்டை தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேளாண் வணிகத்துறை
மாநில அளவில் சிறந்த வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளருக்கு ரூ.2 லட்சம் மாநில அளவில் தமிழக வேளாண் வணிகத் துறையால் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 18-ந் தேதி மாலை 3 மணிக்குள் புதுக்கோட்டை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த விவசாயிகளுக்கான பரிசு பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் ரூ.100 செலுத்தி தங்களது விவரங்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதில், குத்தகை சாகுபடியாளர்கள் உள்பட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் கிடையாது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story