சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக்கோரி மனு
சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
அடிப்படை வசதிகள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் பலர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் மனுக்களை கொடுத்தனர். இதில் ஆலத்தூர் தாலுகா, காரை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், சமத்துவபுரம் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லை. மேலும் ரேஷன் கடை, பஸ் வசதி, அங்கன்வாடி இல்லை. நூறு நாள் வேலையும் வழங்கப்படவில்லை.
எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். நூறு நாள் வேலையை எங்கள் பகுதியிலேயே வழங்கிட வேண்டும். நாரணமங்கலம் வரை வந்து செல்லும் அரசு டவுன் பஸ்களை எங்கள் பகுதி வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
கூடுதல் பஸ்கள்
இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பெரம்பலூர், வேப்பந்தட்டை அரசு கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் பஸ் வசதி சரியாக இல்லாததால் ஆண்டுதோறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைய தொடங்கியுள்ளது. எனவே கல்லூரிக்கு காலை, மதியம், மாலை ஆகிய வேளைகளில் அந்த வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். கல்லூரியின் அருகே வேகத்தடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். மேலும் கல்லூரியில் நூலகம், வளாத்தில் மைதானம் அமைக்க வேண்டும். கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும். கல்லூரியில் போதிய அளவு பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பெரம்பலூர் அரசு கல்லூரியில் முதுகலை படிப்பு, பி.எச்.டி. படிப்பு கொண்டு வர வேண்டும். வேப்பந்தட்டை அரசு கல்லூரிக்கு ஆதிதிராவிடர் விடுதி கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணி தொடங்கப்படவில்லை. அந்த பணிகளை தொடங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
211 மனுக்கள்
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மொத்தம் 211 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story