கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு; ஆஸ்பத்திரியில் சிகிச்சை
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மயங்கி விழுந்த பெண்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் சுல்தான். இவருடைய மனைவி நூஹா (வயது 32). இவர்களுக்கு 2½ வயதில் ஜெசா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக நூஹா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்தார். அங்கு மனுவை கொடுத்தனர்.
அதன்பின்னர் நூஹா திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது கணவர் மற்றும் பொதுமக்கள் திடுக்கிட்டனர். அப்போது நூஹா தனது கணவரிடம், தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து நூஹாவை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக நூஹாவின் கணவர் சுல்தான் கூறியதாவது:-
அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை வேறொரு நபரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கினோம். நிலத்தை வாங்கி 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த இடத்தை விற்ற நபர் மீண்டும் அந்த நிலம் தன்னுடையது என ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தோம். என்னுடைய மனைவி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அப்போது எனக்கே தெரியாமல் விஷம் குடித்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story