கர்நாடக சட்டசபையில் காமராஜருக்கு புகழாரம்
கர்நாடக சட்டசபையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் எளிமையை பாராட்டி, நாட்டிலேயே முதல் முறையாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் என காங்கிரஸ்-பா.ஜனதா உறுப்பினர்கள் புகழாரம் சூட்டினர்.
பெங்களூரு:
ஓட்டு போட்ட மக்கள்
கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-
லால்பகதூர் சாஸ்திரி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவர் நாட்டின் பிரதமராக பணியாற்றினார். ஆனால் அவர் எப்போதும் எளிமையாகவே இருந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஒரு முறை, மத்திய மந்திரிகளுடன் உணவு சாப்பிட்டார். அப்போது உடன் இருந்த மந்திரி ஒருவர், நாம் இவ்வளவு நல்ல உணவை சாப்பிடுகிறோம்.
நமக்கு வரிசையில் நின்று ஓட்டு போட்ட மக்கள் பசியோடு இருக்கிறார்கள் என்று கூறினார். உடனே கோபம் அடைந்த இந்திரா காந்தி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாராம்.
குடிநீர் இணைப்பு
உடன் இருந்த மந்திரிகள் போய் அவரை அழைத்து வந்தனர். மக்கள் பசியோடு இருக்கிறார்களே என்று தான் அவருக்கு கோபம் வந்தது. அதனால் மக்களுக்கு உணவு தானியங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டன. தமிழக முதல்-அமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றார். உடனே அதிகாரிகள், அவரது தாயார் வசித்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கினர். அதற்கு முன்பு வரை அவர் பொது குழாயில் நீர் பிடித்து பயன்படுத்தினார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், தனது தாயாருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கக்கூடாது. உடனே குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இவ்வாறு பல தலைவர்கள் மிக எளிமையாக வாழ்ந்தனர்.
இவ்வாறு ரமேஷ்குமார் பேசினார்.
மதிய உணவு திட்டம்
அப்போது குறுக்கிட்டு பேசிய பா.ஜனதா உறுப்பினர் ராஜீவ், ‘‘தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், ஒரு முறை மதிய நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது குழந்தைகள் சாலைகளின் ஓரமாக விளையாடி கொண்டிருந்தார்களாம். உடனே காரை நிறுத்திய காமராஜர், அந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் ஏன் இங்கு விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டாராம்.
அதற்கு அதிகாரிகள், வீட்டில் இருந்தால் தான் தனது தந்தை உழைத்து கிடைக்கும் பணத்தில் உணவு வாங்கி வந்து கொடுப்பார். பள்ளிக்கு சென்றுவிட்டால் பசியோடு இருக்க வேண்டும் அல்லவா. அதனால் தான் அந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறினார்களாம். உடனே காமராஜர், நாட்டிலேயே முதல் முறையாக மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார்’’ என்றார். காமராஜரின் எளிமை மற்றும் அவரது செயல்பாடுகளை காங்கிரஸ்-பா.ஜனதா உறுப்பினர்கள் பாராட்டி பேசி புகழாரம் சூட்டினர்.
Related Tags :
Next Story