சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணுவின் மகன் சரவணக்குமார்(வயது 24). இவர், 16 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். இதையடுத்து சரவணகுமாரின் தாய் சூரியகலா(45), அந்த சிறுமியின் தாயிடம் பேசியதையடுத்து, திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சரவணக்குமாரும், அந்த சிறுமிக்கும் திருமணம் நடைபெற்ற சில மாதங்களில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூரியகலா, அந்த சிறுமியை மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, தனது மகனுக்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறிச்சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக சூரியகலா, சரவணக்குமாரின் அக்காள் மீனா(26), மீனாவின் கணவர் மோகனராஜ்(30) மற்றும் சிறுமியின் தாய், சித்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூரியகலா, சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story