மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி மனு


மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி மனு
x
தினத்தந்தி 15 March 2022 2:50 AM IST (Updated: 15 March 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

தாமரைக்குளம்:

மழைக்கால நிவாரணம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், நகை கடன் தள்ளுபடி, இலவச வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 324 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் உடையார்பாளையம் தாலுகா சோழமாதேவி கிராமத்தில் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், மழைக்கால நிவாரண நிதி வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், சுமார் 40 குடும்பத்தினர் தலைமுறை, தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். தமிழக அரசு சார்பில் கடந்த 9 ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை எங்களுக்கு நிவாரண நிதி அரசால் வழங்கப்படவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு உடனடியாக மழைக்கால நிவாரண நிதியை வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலுக்கு மண்ணை பெறுவதிலும் பிரச்சினை உள்ளது. அதை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இலவச வீட்டுமனை பட்டா
சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னபாளையம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு வீட்டு வரி செலுத்தி ரசீது பெற்று வருகிறோம். குடிநீர் வசதி பெற்று அதற்கும் தொகை செலுத்தி வருகிறோம். இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர், நீர்நிலை புறம்போக்கில் நாங்கள் குடியிருப்பதாக கூறி குடியிருப்பை காலி செய்ய அறிவிப்பு கொடுத்திருக்கிறார். எனவே மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, நீர்நிலை புறம்போக்கு இல்லை என்பதை உறுதி செய்து எங்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்‌.
ஓ.கூத்தூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், அந்த கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 1965-ம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் காலத்தில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது ஒரு குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகமாகி விட்டதால் போதிய இடவசதி இல்லாமல் தவித்து வருகிறோம். ஆதிதிராவிட மக்கள் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்வதால் வீட்டிற்கு வாடகை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு வேறு இடங்களை வழங்கி இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
முதியோர் உதவித்தொகை
உடையார்பாளையம் தாலுகா தா.சோழன்குறிச்சி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்த சிங்காரு(வயது 80) என்பவர் அளித்த மனுவில், நான் பல ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை பெற்று வந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாத காலமாக திடீரென முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் எனக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்ய இயலவில்லை. வயதான காலத்தில் வேலைக்கு செல்ல இயலவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக, எனக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொதுமக்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story