சேலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொன்று பெண் தற்கொலை முயற்சி-மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை


சேலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொன்று பெண் தற்கொலை முயற்சி-மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 March 2022 4:11 AM IST (Updated: 15 March 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலைக்கு முயன்றார். மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொண்டலாம்பட்டி:
சேலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலைக்கு முயன்றார். மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
குடும்ப தகராறு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுத்தூர் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32). வெள்ளி பட்டறை தொழிலாளி. மேலும் அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருடைய மனைவி ரேவதி (29). இவர்களுக்கு ஜனனிஸ்ரீ (12), வேதிகாஸ்ரீ (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளியாக தியாகராஜன் இருந்ததால், அவரை ரேவதிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் கடன் பிரச்சினை தொடர்பாகவும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
விஷம் கொடுத்தார்
பின்னர் தியாகராஜன் வேலைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ரேவதி, தனது மனதை கல்லாக்கிக்கொண்டு 2 மகள்களுக்கும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்தார். மேலும் அவரும் விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் வேலைக்கு சென்றிருந்த தியாகராஜன் வீட்டுக்கு வந்த போது, வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கத்தில் 3 பேரும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரேவதி, ஜனனிஸ்ரீ, வேதிகாஸ்ரீ ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வேதிகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். ரேவதி, ஜனனிஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story