23 மாதங்களுக்கு பிறகு கிரிவலம் செல்ல அனுமதி
திருவண்ணாமலையில் 23 மாதங்களுக்குப் பிறகு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் 23 மாதங்களுக்குப் பிறகு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வருகை புரிகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து தொற்று குறையாமல் இருந்ததால் பல மாதங்களாக பக்தர்கள் பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
அனுமதி
இந்த நிலையில் 23 மாதங்களுக்கு பிறகு இந்த மாதத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகிற 17-ந்் தேதி மற்றும் 18-ந் தேதி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் பவுர்ணமி தினங்களான 17-ந் தேதி (வியாழக்கிழமை), 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகியநாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
பக்தர்கள் மகிழ்ச்சி
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
=====
Related Tags :
Next Story