கணவர் மீது கொடுத்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்ய மறுத்ததால் விஷம் குடித்த பெண்
ஆலங்காயத்தில் கணவர் மீது கொடுத்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்ய மறுத்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
ஆலங்காயத்தில் கணவர் மீது கொடுத்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்ய மறுத்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவர் மீது புகார்
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த நரசிங்கபுரம் சுண்ணாம்புக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமால் (வயது 35). இவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்தநிலையில், திருமால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, காரைக்கால் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி, ஆண் குழந்தையுடன் இருந்த வினோதினி (28) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது, இவர்கள் இருவருக்கும் 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் வினோதினி பலமுறை முறையிட்டுள்ளார். அப்போது இருவரையும் விசாரித்த போலீசார் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
ஆனாலும் இருவருக்கும் இடையே பிரச்சினை நீடித்ததால், ஆலங்காயம் போலீசாரின் அறிவுறுத்தலின் பெயரில் வினோதினி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் திருமால் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று திடீரென ஆலங்காயம் போலீஸ் நிலையம் வந்த வினோதினி கணவர் மீதான புகார் குறித்து விசாரிக்கும் படி போலீசாரிடம் முறையிட்டுள்ளார்.
அதற்கு போலீசார் வழக்கு வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருப்பதால் அங்கே செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த வினோதினி ஆலங்காயம் பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி அதில் எலி மருந்தை (விஷம்) கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த, ஆலங்காயம் போலீசார் அவரை மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story