தினத்தந்தி புகார்பெட்டி


தினத்தந்தி புகார்பெட்டி
x
தினத்தந்தி 15 March 2022 5:12 PM IST (Updated: 15 March 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார்பெட்டி பொதுமக்கள் குறைகள் பற்றிய பகுதி

சேதமான பேரிகார்டுகள் அகற்றப்படுமா?

திருவண்ணாமலையில் இருந்து வெறையூர் வழியாக திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கிறது. வன்னிய நகரம் பஸ் நிறுத்தம் அருகே வெறையூர் போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தவழியாக இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பேரிகாடுகளில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே சேதமடைந்த பேரிகார்டுகளை அகற்றிவிட்டு புதிய தடுப்புகளை உருவாக்க வேண்டும்.
-குமரன், வெறையூர்.

ஆபத்தான மின்கம்பம் 

திருப்பத்தூர் அவ்வை நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் இந்த மின்கம்பம் எந்தநேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.மகேந்திரன், அவ்வை நகர்.

ஏ.டி.எம். எந்திரத்தில் 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுமா?

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்தால் 500 ரூபாய் நோட்டுகளாகவே வருகிறது. 500 ரூபாய் நோட்டுகளை சில்லறை மாற்றுவதற்கு பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ஏ.டி.எம். எந்திரங்களில் 100, 200 ரூபாய் நோட்டுகளை வைத்தால் சாதாரண ஏழை, எளிய மக்கள் சிரமம் தவிர்க்கப்படும். வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.
-முத்துகிருஷ்ணன், காவேரிப்பாக்கம்.

உடைந்த சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் முக்கிய சாலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டு, சிறிய பாலம் உடைந்தது. இதனால் சாலையின் அடிப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 4 ராட்சத குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கனரக வாகனங்கள் செல்லாதவாறு சாலையின் குறுக்கே தடுப்புகள் வைக்கப்படு, அதன் அருகிலேயே அடித்து செல்லப்பட்ட ராட்சத குழாய்களையும் சாலையில் வைத்துள்ளனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். விபத்துகள் ஏற்படுவதற்கு முன் உடைந்த பாலத்தை  சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
-தாமோதரன், வாணியம்பாடி.

நச்சுப்புகையால் பொதுமக்கள் அவதி

காட்பாடி தாராபடவேடு பாரதிநகர் மெயின்ரோட்டில், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்களும் அங்கேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் மலைபோல் குவிகிறது. இந்த குப்பைகளை அங்கிருந்து அகற்றாமல் தீவைத்து எரித்து வருகின்றனர். இதில் இருந்து ஏற்படும் நச்சுப்புகையால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா? 

திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சி, அம்பேத்கர்நகர் கோவில் தெருவில் சரியான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர்தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக இந்தவழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். அருகிலேயே கோவில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகிறார்கள். எனவே கால்வாயை சீரமைத்து தரவேண்டும்.
-குமரன், துத்திப்பட்டு.
தினத்தந்திக்கு நன்றி

வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேளாளர் தெருவில் சாலை சீரமைப்பு பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகாா்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து விட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி.
ஜி.ரமேஷ்குமார், சத்துவாச்சாரி.

Next Story