ஆழியாறு பாசன சங்க தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்


ஆழியாறு பாசன சங்க தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 15 March 2022 6:50 PM IST (Updated: 15 March 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

பொள்ளாச்சி

ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

வாக்காளர்கள் எண்ணிக்கை

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டில் பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, வடக்கலூர், பெரியணை ஆகிய பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களும், புதிய ஆயக்கட்டில் காளியாபுரம், ஒடையகுளம், மார்ச்சநாயக்கன்பாளையம், சேத்துமடை, கோட்டூர்-1, கோட்டுர்-2, பெத்தநாயக்கனூர், அங்கலகுறிச்சி, துறையூர், கம்பாலப்பட்டி, சமத்தூர், நாயக்கன்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மண்ணூர், திம்மங்குத்து, வேட்டைக்காரன்புதூர் ஆகிய பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களும் உள்ளன.
பழைய, புதிய ஆயக்கட்டில் 21 பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆண்கள் 9,972 பேரும், பெண்கள் 3,119 பேரும் சேர்த்து மொத்தம் 13 ஆயிரத்து 91 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு பாசன சங்க தலைவர் தேர்தல் நடத்தாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு பாசன சங்க தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

இந்த நிலையில் வேட்புமனுக்கள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படுகிறது. பாசன சங்க தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். 21-ந் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பிறகு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வருகிற 27-ந்தேதி காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story