குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய 6 சாயப்பட்டறைகள் இடிப்பு-மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை


குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய 6 சாயப்பட்டறைகள் இடிப்பு-மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2022 8:09 PM IST (Updated: 15 March 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய 6 சாயப்பட்டறைகளை இடித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குமாரபாளையம்:
குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய 6 சாயப்பட்டறைகளை இடித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிகாரிகள் சோதனை
குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சாயப்பட்டறைகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் அவற்றை பயன்படுத்தாமல் சாயக்கழிவுகளை சாக்கடை வழியாக விட்டு காவிரி ஆற்றை மாசுபடுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர் செல்வகுமார், உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இன்று பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் திடீரென சோதனை நடத்தினர். 
சாயப்பட்டறைகள் இடிப்பு
அப்போது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல் குமாரபாளையத்தில் இயங்கி வந்த 5 சாயப்பட்டறைகளையும், பள்ளிபாளையத்தில் ஒரு சாயப்பட்டறையையும் கண்டுபிடித்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அங்கு சாயம் ஏற்றுவதற்காக குவிக்கப்பட்டிருந்த நூல் கட்டுகள், நூல் நனைக்கும் தொட்டி ஆகியவற்றை இடித்து அகற்றினர்.
மேலும் இனி மீண்டும் இங்கு சாயப்பட்டறைகளை இயக்கினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீதும், நில உரிமையாளர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 
குமாரபாளையத்தில் தண்ணீர் பந்தல்காடு, தம்மண்ண செட்டியார் வீதி உள்பட 5 இடங்களில் இந்த சாயப்பட்டறை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல் இயங்கி வந்த சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

Next Story