மகாராஜகடை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகள்
மகாராஜகடை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விவசாய பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்தன.
குருபரப்பள்ளி:
யானைகள் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை பகுதி ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லை பகுதியாகும். வனங்கள் அடர்ந்த இந்த பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் கோடை காலத்தில் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம்.
இந்தநிலையில் கர்நாடக, ஆந்திர வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம், மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவற்றில் 9 யானைகள் அதிகாலை நேரத்தில் மகாராஜகடைக்குள் புகுந்து விளை நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
விரட்டும் முயற்சி
பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள், யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மேலும் காட்டு யானைகளை மீண்டும் ஆந்திரா, கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை
ஓசூர் சானமாவு காப்புக்காட்டில் 9 யானைகள் சுற்றித்திரிந்தன. அவற்றை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அவை போயிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் அருகே சாலையை கடந்து ஜெக்கேரி, லட்சுமிபுரம் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் புகுந்தன.
இந்தநிலையில் நேற்று லக்கசந்திரத்தில் பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் மா கன்றுகளை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்த வன காப்பாளர் பிரசாந்த் சேதமான பயிர்களை பார்வையிட்டார். தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story