2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
போடியில் இருந்து கேரள மாநிலத்துக்கு 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் போடிமெட்டு பகுதியில், உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி ஒரு டன் இருந்தது.
இதேபோல் அந்த வழியாக மற்றொரு ஜீப் வேகமாக வந்தது. இதனைக்கண்ட பறக்கும் படையினர், அந்த ஜீப்பை மறித்தனர். ஆனால் ஜீப் நிற்காமல் சென்றது. இதனையடுத்து பறக்கும்படையினர், அந்த ஜீப்பை பின்தொடர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அந்த ஜீப்பில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. 2 ஜீப்களில் இருந்தும் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை போடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர்.
இதேபோல் ஜீப்களை ஓட்டி வந்த போடியை சேர்ந்த அஜித்குமார் (வயது 26), மேல சொக்கநாதபுரத்தை சேர்ந்த கோபி (27) மற்றும் போடியை சேர்ந்த அரிசி உரிமையாளர் பாலமுருகன் (36) ஆகிய 3 பேரையும், பறிமுதல் செய்த ஜீப்களையும் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story