விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
ஆண்டிப்பட்டி அருகே கிடங்கு பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தில் மத்திய கிடங்கு மேம்பாடு, ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் ஆகியவை சார்பில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கு கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தலைமை தாங்கினார்.
பெரியகுளம் சரக துணைப்பதிவாளர் முத்துக்குமார், கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் பயிர்க்கடன், இடுபொருட்கள் விற்பனை, மத்திய கால கடன்கள், கிடங்கு சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார். மதுரை கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வர் கோபால்சாமி கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஆய்வு அதிகாரி தங்கவேலு, எதிர்கால உணவுத்தேவை, கால்நடைகளுக்கான தீவன தேவை, விதை தேவை குறித்தும், அறிவியல் பூர்வமாக அவற்றை சேமித்து வைப்பது மற்றும் தானியங்களை நுண்ணுயிரிகள், பூச்சிகள், எலிகள் போன்றவற்றிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ராமகிருட்டிணன், கள அலுவலர் பவிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக எம்.சுப்புலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வெங்கட ராமானுஜம் வரவேற்றார். முடிவில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story