திண்டுக்கல் அருகே ரெயில்வே மின்கம்பியை பிடித்து இறைச்சி வியாபாரி தற்கொலை
திண்டுக்கல் அருகே ரெயில்வே மின்கம்பியை பிடித்து இறைச்சி வியாபாரி தற்கொலை செய்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே குளத்தூரை அடுத்த லட்சுமணபுரம் பகுதியில் ரெயில் தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தின் அருகில் உள்ள ரெயில்வே மின்கம்பத்தின் அடியில் நேற்று முன்தினம் இரவு உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கருகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், உடல் கருகி இறந்து கிடந்தவர், குளத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் இறைச்சிக்கடை மற்றும் இரவு நேர துரித உணவு கடை நடத்தி வந்தார்.
மின்கம்பியை பிடித்து தற்கொலை
இவருடைய மனைவி பத்மினி. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் பாலமுருகன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அது அவரை மேலும் பாதித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், லட்சுமணபுரம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு தண்டவாளத்தின் மேல் ரெயில்களை இயக்க உயர்அழுத்த மின்பாதை அமைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். உடனே அவர் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்துள்ளார். அப்போது உயர்அழுத்த மின்சாரம் பாலமுருகனின் உடலில் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் இறைச்சி வியாபாரி ரெயில்வே மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story