தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 March 2022 8:42 PM IST (Updated: 15 March 2022 8:42 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசியில் இருந்து கடையம், ரவணசமுத்திரம் விலக்கு வழியாக சம்பன்குளத்திற்கு இயங்கிக் கொண்டு இருக்கும் அரசு பஸ்சின் முன் பகுதியில் உள்ள பெயர் பலகையில் வழித்தடம் எண் 30 எனவும்,  பின்பகுதி பெயர் பலகையில் வழித்தடம் எண் 31 எனவும் இருந்தது. இதுகுறித்து முதலியார்பட்டியைச் சேர்ந்த அம்ஜத் என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது.
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்சின் பின்பகுதி பெயர் பலகையில் வழித்தடம் எண் 31-ஐ நீக்கிவிட்டு, 30 என்று மாற்றி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

வாகன ஓட்டிகள் அவதி 

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள சர்வீஸ் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. மேலும், இந்த சாலையில் அடுத்தடுத்து 2 பாதாள சாக்கடை மூடிகள் சரியாக மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த பாதாள சாக்கடை மூடியை சரியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அருண் விக்னேஷ், பாளையங்கோட்டை.

சாலையோரத்தில் கிடக்கும் கழிவு பொருட்கள்

பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள மனக்காவலம்பிள்ளை நகரில் சாலையோரம் கழிவு பொருட்கள் கிடக்கிறது. இது அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, இந்த கழிவு பொருட்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பாளையங்கோட்டை.

சாலை வசதி வேண்டும் 

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கடம்பன்குளம் கிழக்கு தெரு வடக்கு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்களுக்கு முறையான சாலை வசதி, தண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதிகள் இல்லை. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த பகுதி பொதுமக்களின் நலன் கருதி சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
மணிகண்டன், கடம்பன்குளம்.

மின்விளக்கு அமைக்கப்படுமா?

அம்பை நகராட்சி 11-வது வார்டு சுப்பிரமணியபுரம் பொத்தை தெருவில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தெருவில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும், ெதரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரங்களில் வீடு திரும்புபவர்களை துரத்துகின்றது. ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி தெரு பகுதியில் மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.

குப்பைகள் அகற்றப்படுமா? 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வம்பளந்தான் முக்கு - வல்லம் சாலையில் டாஸ்மாக் அருகே சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் ஏராளமான மதுபாட்டில்களும் உடைந்து கிடப்பதால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களை பதம் பார்க்கின்றது. 
குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை உடனுக்கு உடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம் 

ஆலங்குளம் அருகே நாலாங்குறிச்சி கிராமத்தில் பழைய வேத கோவில் தெருவில் மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரியப்பன், நாலாங்குறிச்சி.

கழிப்பறை சரிசெய்யப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை நீரின்றி உபயோகப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மிகவும் மோசமாக உள்ளதால் யாரும் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் உள்ளூர், வெளியூர் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த கழிப்பறையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சிவா, கோவில்பட்டி.


Next Story