போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக 547 நூலகங்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் வினியோகம்
போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக 547 நூலகங்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பல்வேறு அரசு வேலைகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு அதிகாரி ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர். இதற்காக பலர் தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்கின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் பயிற்சியிலும் பலர் சேருகின்றனர். மேலும் நூலகங்களுக்கு சென்று போட்டி தேர்வுக்கான புத்தகங்களை படித்து குறிப்பெடுத்து செல்கின்றனர். அதற்காக நூலகங்களில் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரம் பெரும்பாலான போட்டி தேர்வுகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்களில் இருந்து ஏராளமான வினாக்கள் கேட்கப்படுகின்றன.
ஆனால் அந்த பாடப்புத்தகங்கள் அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. இதனால் கடைகளில் புத்தகங்களை விலைக்கு வாங்கி படிக்கின்றனர். இது அனைவருக்கும் சாத்தியமாக இருப்பது இல்லை. எனவே நூலகங்களில் பாடப்புத்தகங்களை வைக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 547 நூலகங்களுக்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ், ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 27 கிளை நூலகங்கள், 1 ஊர்ப்புற நூலகம் என மொத்தம் 28 நூலகங்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதையொட்டி பாடப்புத்தகங்கள் மாவட்ட நூலகத்துக்கு வந்துள்ளன. அங்கிருந்து பாடப்புத்தகங்கள் 28 நூலகங்களுக்கும் அனுப்பும் பணி நடக்கிறது.
Related Tags :
Next Story