சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது உடந்தையாக இருந்த தந்தை, தாய் உள்பட 3 பேரும் சிக்கினர்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வாலிபருக்கு உடந்தையாக இருந்த தந்தை, தாய் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள லந்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 42). அவருடைய மனைவி தேவிகா (36). இவர்களது மகன் அஜித் (19). ராஜா, மூங்கில் நார் கூடை பின்னி விற்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக குடும்பத்துடன் ஊர், ஊராக செல்வது வழக்கம்.
இந்தநிலையில் அஜித்துக்கும், 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவர்களை கண்டித்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மாயமானாள்.
இதற்கிடையே ராஜாவும், தனது குடும்பத்துடன் ஊரை காலி செய்துவிட்டார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு திருமணம்
மாயமான சிறுமியையும், அஜித் குடும்பத்தினரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியுடன், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புதுப்பட்டியில் தங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனே சத்திரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று புதுப்பட்டிக்கு விரைந்து சென்றனர். அங்கு அஜித்துக்கும், சிறுமிக்கும் அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்து குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த சிறுமியை மீட்டனர்.
ராஜா, அஜித், தேவிகா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு சிறுமியிடம் விசாரணை நடத்தி, அவரை பழனியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
போக்சோவில் கைது
இதற்கிடையே சிறுமியை திருமணம் செய்ததாக அஜித் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தந்தை ராஜா, தாய் தேவிகா, 17 வயது சிறுவன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story