உடுமலை வழியாக பாலக்காடு வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்


உடுமலை வழியாக பாலக்காடு வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 10:21 PM IST (Updated: 15 March 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை வழியாக பாலக்காடு வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

உடுமலை:
திண்டுக்கல்லில் இருந்து உடுமலை வழியாக பாலக்காடு வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
திண்டுக்கல்-பாலக்காடு ரெயில்பாதை
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக திண்டுக்கல் வரை முன்பு மீட்டர் கேஜ் ரெயில்பாதையாக இருந்தது. இதன் பிறகு இந்த ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக (பிராட்கேஜ்)மாற்றப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ரெயில்பாதையை மின் மயமாக்குவதற்கான பணிகள் நடந்துள்ளன. 
இதில் பழனி முதல் பொள்ளாச்சி வரை 63 கி.மீ.தூரத்திற்கு மின்மயமாக்குதல் பணிகள் நிறைவடைந்துள்ளதை கடந்த 7-ந்தேதி தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். அத்துடன் பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரையும் மின்மயமாக்குதல் பணிகளை ஆய்வு செய்தார். இந்த வழித்தடத்தில் உள்ள ரெயில்பாதை மின்மயமாக்குதலால் வரும்காலத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்பது ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
இந்த நிலையில் திண்டுக்கல் முதல் பாலக்காடு வரையிலான ரெயில்பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நேற்று  நடந்தது. திண்டுக்கல்லில் இருந்து காலையில் புறப்பட்ட இந்த ரெயில் உடுமலையை அடுத்துள்ள மைவாடி ரோடு ரெயில் நிலையத்தை காலை 9.25 மணிக்கு கடந்து வந்தது. அந்த ரெயில் 9.31 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்தை கடந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்டு  சென்றது. 
மைவாடிரோடு ரெயில் நிலையத்தில் இருந்து உடுமலை ரெயில் நிலையம் 8 கி.மீ. தூரம் உள்ளது. இந்த தூரத்தை இந்த ரெயில் 6 நிமிடங்களில் கடந்து சென்றது.
 4 பெட்டிகளுடனான இந்த சிறப்பு ரெயிலில், தண்டவாளத்தின் அதிர்வுகளை பதிவு செய்யும் ஆசிலேசன் மானிட்டரிங் சிஸ்டம் என்ற கருவி பொருத்தி, ரெயில் பாதையின் உறுதித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story