மாடூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் தர்ணா


மாடூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 15 March 2022 10:42 PM IST (Updated: 15 March 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணம் வசூலிக்காததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் 67 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருந்து, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. 
சம்பளம் வழங்கக்கோரி நேற்று மதியம் 2 மணியளவில் அனைத்து ஊழியர்களும் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை 

இந்த போராட்டத்தில் மேட்டுப்பட்டி மற்றும் நத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் சுங்கச்சாவடி மேலாளர் வினோத், தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சுமூக முடிவு எட்டவில்லை. எனவே இவர்களது போராட்டம் இரவு 8 மணியை கடந்தும் நடைபெற்றது. 
ஊழியர்களின் போராட்டத்தால் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஆள் இல்லை. இரு மார்க்கத்திலும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story