8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள்


8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள்
x
தினத்தந்தி 15 March 2022 11:22 PM IST (Updated: 15 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சிற்பங்கள் ஆய்வு

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் உதயராஜா மற்றும் வெடால் விஜயன் ஆகியோருக்கு வந்தவாசியை அடுத்த தெள்ளார் அருகே கீழ்நமண்டி கிராமத்தில் பலகை கல்லில் 2 சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கீழ்நமண்டி ஊரின் வயல்வெளி அருகே சுமார் 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் 8 கரங்களுடன் புடைப்பு சிற்பமாக இருப்பது, கொற்றவை சிலை என்பது கண்டறியப்பட்டது. 

அதன் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீள் வட்ட முகத்தில், இருகாதுகளிலும் பனையோலை குண்டலமும், கழுத்தில் ஆரம் போன்ற பட்டையான அணிகலனும், மார்பின் குறுக்குவாட்டில் சன்னவீரமும், அனைத்து தோள் மற்றும் கைகளிலும் வளைகள் அணிந்து இடை ஆடை தொடைவரை நீண்டு காட்சி தருகிறது. தோளின் இருபுறமும் அம்பை தாங்கும் கூடையான அம்புரா தூளியும் உள்ளது.

8-ம் நூற்றாண்டு

தனது மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரமும் முறையே மற்ற வலது கரங்களில் வாள் மற்றும் மான் கொம்பு ஏந்தியபடி மற்றொரு கை இடை மீது ஊரு முத்திரையில் உள்ளது. 

மேல் இடது கரம் சங்கு தாங்கியும் முறையே மற்ற கைகள் வில், கேடயமும் ஏந்தி கீழ் இடது கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் காட்சி தருகிறது.

கொற்றவையின் பின்புறம் வாகனமாக நீண்ட கொம்புகளுடன் கலைமானுடன் கம்பீரமாக எருமை தலையின் மீது நின்றவாறு காட்சி தருகிறது.

அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைப்யை வைத்து பார்க்கும் போது இந்த சிற்பம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலமாக இருக்கலாம்.

தவ்வை

மேலும் இந்த ஊரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே பலகை கல்லில் புடைப்பு சிற்பமாகத் தவ்வை சிற்பம் காணப்படுகிறது. 

மூன்றடுக்கு கரண்ட மகுடம் தரித்துப் பருத்த இடையுடன் நின்ற கோலத்தில், வலது கை அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும், இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும், இடையாடை பாதம் வரை பரவி அழகுற வடிக்கப்பட்டுள்ளது. 

தவ்வையின் தலை அருகே வலதுபுறம் காக்கை கொடியும், இடது புறம் துடைப்பமும் காட்டப்பட்டுள்ள நிலையில், காலருகே தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் காட்சி தருகிறது.

இது போல நின்ற நிலையில் காணப்படும் தவ்வை சிற்பம் மிகவும் அரிதாகும். இந்த சிற்பமும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாகக் கருதலாம். 

தவ்வை சிற்பத்தின் அருகே சிறு கொட்டகையில் சதுர வடிவிலான ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும், பிற்கால அம்மன் சிலையும் காணப்படுகிறது. 

இச்சிவலிங்கம் மண்ணில் புதைந்து கிடந்ததாகவும், அதனை மீட்டு சில வருடங்களாக ஊர் மக்கள் வழிபாடு செய்து வருவதோடு கோவில் கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லவர் கால கோவில்

இந்த ஊரில் ஏராளமான பெருங்கற்கால சின்னம் காணப்படுவதோடு, பல்லவர் கால தடயங்களும் காணக்கிடைக்கிறது. 

சிவலிங்கம் மற்றும் சிற்பங்களை வைத்துப் பார்க்கையில் இவ்வூரில் பல்லவர் கால கோவில் இருந்து கால ஓட்டத்தில் அழிந்துள்ளதை அரிய முடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story