சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி முடித்த 525 வீரர்களை வழியனுப்பும் விழா
சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி முடித்த 525 வீரர்களை வழியனுப்பும் விழா நடைபெற்றது.
சிவகங்கை,
சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி முடித்த 525 வீரர்களை வழியனுப்பும் விழா நடைபெற்றது.
பயிற்சி நிறைவு
சிவகங்கையை அடுத்த இலுப்பக்குடியில் இந்தோ-திெபத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையம் கடந்த 2011-ல் தொடங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக இங்கிருந்து பயிற்சி முடித்த சுமார் 4,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 525 வீரர்கள் பயிற்சி பெற்றனர்.
44 வார கால பயிற்சியை நிறைவு செய்த அவர்களை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கும் விழா நேற்று இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் ஐ.ஜி. சஞ்சீவ் ரெய்னா தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி பயிற்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஐ.ஜி. ஏற்று கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை 1962-ல் சீன போருக்குப்பின், இந்தியா, சீனா எல்லை பாதுகாவலுக்காக தொடங்கப்பட்டது. அப்போது, 4 பட்டாலியன்களாக இந்த பிரிவு தொடங்கப்பட்டது. இந்த படை விரிவடைந்து தற்போது 56 பட்டாலியன்களாக உள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.
3,488 கி.மீ. தூரம்
இந்திய-சீன எல்லையான ஜம்மு காஷ்மீரின் காரகோரம் என்ற இடத்தில் தொடங்கி அருணாசல பிரதேசத்தின் ஜர்செல்லா வரை 3 ஆயிரத்து 488 கி.மீ. தூரம் வரை இந்தபடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி முதல் 18 ஆயிரத்து 700 அடி வரையிலும், மிகவும் குளிரான சீதோஷ்ண நிலையிலும் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தபடையினர் எல்லை பாதுகாப்பு தவிர, நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர ஜனாதிபதி மாளிகை மற்றும் தூதரகங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி பெற்ற வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட வீரா்களுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கபட்டன. விழாவில் சிவகங்கை இந்தோ-திெபத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ரன்வீர் சிங், பயிற்சி பிரிவு அதிகாரி பிரிதம் சிங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story