‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் கனவு திட்டம்- கோவி.செழியன்


‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் கனவு திட்டம்- கோவி.செழியன்
x
தினத்தந்தி 16 March 2022 12:15 AM IST (Updated: 15 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் கனவு திட்டம் என தலைமை கொறடா கோவி.செழியன் கூறினார்.

திருப்பனந்தாள்:-

‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் கனவு திட்டம் என தலைமை கொறடா கோவி.செழியன் கூறினார். 

மாணவருக்கு உதவி

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கருப்பூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பிரேமாவதி. கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் பாலாஜி ‘நீட்’ தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 435 மதிப்பெண் பெற்றார். 
அவருக்கு நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் படிப்பதற்கு போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையில் அவருடைய குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். இதை அறிந்த அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மாணவனை நேரில் சந்தித்து மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை வழங்கினார். மேலும் மருத்துவ படிப்பு முடியும் வரை அனைத்து உதவிகளையும் தனது செலவில் செய்வதாக உறுதி அளித்தார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், துணைத்தலைவர் அண்ணாதுரை, உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா, முன்னாள் தலைமை ஆசிரியர் வீராசாமி, பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர். 
முன்னதாக கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனவு திட்டம்

நகர்ப்புறத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது எளிதல்ல. மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர் சட்ட ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறார். 
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானங்களை 2 முறை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு இன்றி மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து பயன்பெற வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு மத்திய அரசு விதிவிலக்கு அளிப்பதோடு, அதை ரத்து செய்ய வேண்டும். 
நீட் தேர்வை ரத்து செய்வது தான் தமிழக அரசின் கனவு திட்டம் ஆகும். இதற்கு பொதுமக்களும் மிகப்பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story