நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 16 March 2022 12:03 AM IST (Updated: 16 March 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

நாமக்கல்:
நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் வசித்து வருபவர் சரவணக்குமார். இவர் எஸ்.புதுப்பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்தினர் பெயரில் கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்த நபர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஆசிரியர் சரவணக்குமார் வீட்டிலும் நேற்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வந்தனர்.
அப்போது வீடு பூட்டி இருந்தது. எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் வெளி மாவட்டத்தில் இருப்பதாகவும், பிற்பகலில் வந்து விடுவதாகவும் கூறினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பி சென்று விட்டனர். இதற்கிடையே பிற்பகல் 3 மணி அளவில் சரவணக்குமார் கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
இதை தெரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 பேர் உடனடியாக சோதனைக்கு வந்தனர். இவர்கள் வீட்டில் உள்ள மடிக்கணினி மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து இரவு வரை சோதனை நடந்தது.


Next Story